GuidePedia

0
பஞ்ச் டயலாக் பேசுவது, நுாறு பேரை அடிப்பது, சுமோவை ஒற்றைக் கையால் துாக்கி வீசுவது என, தமிழ் சினிமா ஹீரோக்களுக்காக போலியாக கட்டப்பட்டுள்ள 'இமேஜை' தகர்த்து எறிந்து, யதார்த்த நடிப்பால், ரசிகர்களை தன் வசம் ஈர்த்துள்ள நடிகர் விஜயசேதுபதி.  அவர் தன் சினிமா அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்.

vijay-chethupathi-petti


சமீபத்தில் பல வெற்றி படங்களை கொடுத்திருக்கிறீர்கள்.. எப்படி இது சாத்தியமானது?

சில கதைகள், எனக்காகவே அமைந்தது போல் இருக்கும். சில கதைகளை கேட்டவுடன், நான் அந்த கேரக்டருக்கு பொருந்த மாட்டேன் என, தோன்றும். ஆனாலும், இயக்குனர்கள் மேல் நம்பிக்கை வைத்து நடிப்பேன். 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தில், என் கேரக்டரை பார்க்க சாதாரணமாக தெரியும்.

ஆனால், அந்த கேரக்டருக்காக நான் ரொம்ப சிரமப்பட்டிருக்கேன். 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா?' கேரக்டர் எனக்கு, 'செட்'டாகுமா என்று பயந்தேன். ஆனால், இப்போது எங்கே போனாலும், ரசிகர்கள் ஒரே, 'குமுதா பீல்' தான்.

தொடர்ந்து குறும்பட இயக்குனர்கள் பலருக்கும் நீங்கள் நம்பிக்கை கொடுத்து, மாற்று சினிமா வர காரணமாக இருப்பது போல் தெரிகிறதே?

இல்லை. 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' இயக்குனர் பாலாஜி, 'பீட்சா' - கார்த்திக், 'சூது கவ்வும்' - நலன் இப்படி பலரும், அவங்களோட வித்தியாசமான படைப்புகளால் பேசப்பட்டனர். அதில் நான் ஒரு சிறிய பங்கு, அவ்வளவு தான்.

மற்றபடி, என்னால் தான் இந்த மாற்றம் என்றெல்லாம் சொல்ல முடியாது. காலத்திற்கு ஏற்ற மாதிரி, அவ்வப்போது மாற்று சினிமா வந்துட்டு தான் இருக்கு. புதுப்புது இயக்குனர்கள், வெவ்வேறு களத்துடன் வருகின்றனர். இப்போது தமிழ் சினிமா, அதிகம் கவனிக்கப் படுவதாக நினைக்கிறேன்.

உங்களுடன் பழக்கமான இயக்குனர்களோடு மட்டும் தான் படம் நடிப்பீர்களா?


அப்படி எல்லாம் இல்லை... 'பண்ணையாரும் பத்மினியும்' பட இயக்குனர் அருண், 'மெல்லிசை' படம் எடுக்கும் ரஞ்சித், 'வன்மம்' பட இயக்குனர் ஜெய கிருஷ்ணா, எனக்கு பழக்கம் இல்லாதவர்கள் தான். கதை கேட்டதும் பிடித்து போனது. ஷூட்டிங் போன பின் தான், அவர்களுடன் பழகினேன். எல்லாரிடமும் கதை கேட்பேன்; பிடித்தால் நடிப்பேன்; அவ்வளவு தான்.

கதை தேர்வு செய்யும் போது யாருடனாவது, 'டிஸ்கஸ்' செய்வீர்களா?


என்னை பொறுத்தவரை, ஒரு விஷயத்தை, நுாறு பேரிடம், 'ஒபினியன்' கேட்டால், எந்த அளவுக்கு சரியாக இருக்கும் என்று தெரியாது. எல்லாரையும் திருப்தி படுத்தும் அளவுக்கு ஒரு படம் பண்ண முடியாது.ஆனால், என் படத்தை பார்ப்பவர்கள், காசு கொடுத்து டிக்கெட் வாங்கியதற்கு, நல்ல படத்தை பார்த்த திருப்தி இருக்க வேண்டும் என, ஆசைப்படுகிறேன். எல்லா கதையும், முதலில் என் மனதை தொட வேண்டும். அப்படி ஒரு கதையை மட்டுமே நான் தேர்வு செய்றேன்.

'சிக்ஸ் பேக்' நடிகர்களுக்கு மத்தியில் சர்வ சாதாரணமா நடிச்சிட்டு போற மாதிரி இருக்கே?


கதைக்கு என்ன வேணுமோ, அதைத்தான் நான் செய்வேன். 'சிக்ஸ் பேக்' வைக்க ஆசை தான். ஆனால், எனக்குள் கொஞ்சம் சோம்பேறி தனமும் இருக்கிறது. கதைக்கு அப்படி ஒரு விஷயம் தேவைப்பட்டால், என்னை மாற்றுவேன்.ஆனால், வெறும் விளம்பரத்திற்காக செய்ய மாட்டேன். தலையை சரியா சீவாமல், சாதாரண உடையில், அடுத்த வீட்டு பையன் போல் வருவதை தான், ரசிகர்கள் விரும்புகின்றனர்.

இப்ப நிறைய படங்களில், இரண்டு ஹீரோ 'சப்ஜெக்டில்' நடிக்கிறீர்களே?


அந்த கேரக்டர் பேசப்படுவது போல் இருந்தால், இரண்டு ஹீரோ இல்லை மூன்று ஹீரோ சப்ஜெக்டிலும் நடிப்பேன். ஆள் முக்கியம் இல்லை; கதை தான் முக்கியம். நல்ல கேரக்டர் அமைந்தால் சிறிய ரோலில் கூட நடிக்க தயார்.

உங்களுடன் நட்புடன் பழகிய ஹீரோயின் யார்?


என் முதல் பட ஹீரோயின் வசுந்தரா. அப்போது என்னை ஹீரோ என்று சொன்னால், யாரும் நம்ப மாட்டார்கள். ஆனால், என்னையும் மதித்து, வசுந்தரா வந்து பேசுவாங்க.எனக்கு நடிகனா அடையாளம் இல்லாதபோதும் பழகிய பெண் அவர். அப்புறம், 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' பட ஹீரோயின் காயத்ரி. கேரக்டரை உள் வாங்கி நடிக்கும் ஆர்டிஸ்ட். அவங்களும் எனக்குஓகே தான்.

வெறும் விளம்பரத்திற்காக 'சிக்ஸ் பேக்' வைத்து நடிப்பதில் விருப்பமில்லை. சாதாரண உடையில், அடுத்த வீட்டு பையன் போல் வருவதை தான், ரசிகர்கள் விரும்புகின்றனர்

Post a Comment

 
Top